வடமாகாண ஆசிரியர்களின் போராட்டம்

14-02-2017

தேர்தல் காலங்களில் மக்கள் முன் வந்து குனிந்து வளைந்து வாக்குகள் பெற்றுப் பதவிகளுக்கு வருவோரும் மக்களது வரிப்பணத்தில் பெரும் சம்பளங்களும் ஏனைய வரப்பிரசாதங்களும் அனுபவித்துநிற்கும் உயர் அதிகாரிகளும் தத்தமது அதிகாரக் கதிரைகளில் அமர்ந்து கொண்டதும் அதிகாரத் திமிர்த்தனத்துடனும் தன்முனைப்புடனும் செயல்படுவதையே காண முடிகிறது. இதன்மூலம் அதிகாரத் துஷ்பிரயோகங்களிலும் ஊழல்களிலும் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாகவே மக்கள் பல்வேறு நிலைகளில் தமது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

கேப்பாப்புலவில் – புதுக்குடியிருப்பில் மத்திய அரசாங்கத்தை நோக்கிய நில மீட்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதே வேளை நல்லூர் செம்மணி வீதியில் வடமாகாணக் கல்வி அமைச்சு முன்பாக ஆசிரியர்கள் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிராகக் கோரிக்கை வைத்துத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தி வருகிறார்கள். ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளும் அதற்கான போராட்டமும் முற்றிலும் நியாயமானவையாகும். அவற்றுக்கு எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகின்றது. அத்துடன் வடமாகாணக் கல்வி அமைச்சின் மூன்று ஆசிரியர்களுக்கு எதிரான பணித்தடையை நீக்குவதற்கும், சேவை நிபந்தனைக் காலம் முடிந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதை வற்புறுத்தியும் ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் தமது ஆதரவை இப்போராட்டத்திற்கு வழங்கி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படுவதற்கு உதவ வேண்டும் எனவும் எமது கட்சி வேண்டிக் கொள்கிறது.

வெளி மாவட்டங்களில் நியமனம் பெற்ற ஆசிரியர்களின் நிபந்தனைச் சேவைக்காலம் முடிவுற்றுப் பல மாதங்களாகியும் அவர்களுக்கான மாற்றம் வழங்கப்படவில்லை என்பதைப் பல நிலைகளிலும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். அவை எவற்றையும் வடமாகாணக் கல்வியமைச்சு கவனத்திற் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே ஆசிரியர்கள் வடமாகாணக் கல்வி அமைச்சு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனைப் பொறுக்க மாட்டாது நியாயம் கோரிய ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில், முன்னின்ற மூன்று ஆசிரியர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திப் பழிவாங்கும் வகையில் பணித்தடை வழங்கப்பட்டது. இன்று வரை பணித்தடை நீக்கப்படவும் இல்லை, அதற்கான விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்மூலம் அவ் ஆசிரியர்களுக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை. இவ் அநீதியை எதிர்த்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்கள் அணி திரண்டு வடமாகாணக் கல்வி அமைச்சின் முன்னால் தொடர் போராட்டம் நடாத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளும் தொடர் போராட்டமும் முற்றிலும் நியாயமானவையாகும். அப்போராட்டம் வெற்றி பெற சமூக அக்கறையுள்ள அனைவரும் ஆதரவு வழங்குவது அவசியமாகும்.


சி. கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *