மாருதி – சுசுகி தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவும் ஒத்துழைப்பும்

04-04-2017

யப்பான்-இந்தியப் பெரு முதலீட்டிலான, இந்தியாவின் மாருதி-சுசுகி வாகன உற்பத்தித் தொழிற்சாலையின் 13 தொழிலாளர்களுக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனையும், 4 பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனையாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. பாசிச இந்துத்துவா மோடி அரசாங்கத்தின் கீழ் மாருதி-சுசுகி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மேற்படித் தீர்ப்பினை எதிர்த்தும் அதனை மீளப்பெறும்படியும் கோரிக்கை வைத்து, மார்ச் மாதம் 4ம் 5ம் திகதிகளில் முழு இந்தியாவிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களது போராட்டக் கோரிக்கையுடன் இலங்கையின் தொழிலாளர்களும் இணைந்து தமது ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் மாருதி-சுசுகி தொழிலாளர்களின் விடுதலைக்குக் குரல் கொடுப்பதுடன் மோடி அரசின் தொழிலாளர் விரோதச் செயற்பாட்டைக் கண்டித்தும் எதிர்த்தும் நிற்கிறார்கள். அத்துடன் உலகெங்கிலுமுள்ள 50க்கும் மேற்பட்ட புரட்சிகரக் கட்சிகளையும் அமைப்புக்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ICOR அமைப்பு மாருதி-சுசுகி தொழிலாளர்களின் விடுதலைக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி நிற்கிறது.

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் யப்பான்-இந்திய பெரு முதலீட்டின் கீழ் உருவாக்கப்பட்ட மாருதி-சுசுகி (மோட்டார் கார்) வாகன உற்பத்தித் தொழிற்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொழிலாளர்கள் தமது தொழிற்சங்க உரிமைகளுக்காகப் போராடி வருகின்றார்கள். ஆறாயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட தற்காலிகத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கோரியும் குறைந்த சம்பளம், தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுத்தல், நிர்வாகத்தின் அரச உதவியுடனான கொடிய அடக்குமுறைகள் போன்றவற்றுக்கு எதிராக மாருதி-சுசுகி தொழிலாளர்கள் போராடி வந்திருக்கிறார்கள். அவர்களை அச்சுறுத்தவும் தொழிற்சங்க உரிமைகளை மறுத்துப் பழிவாங்கவும், தொழிற்சாலையில் ஒரு மேலாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொழிலாளர்கள் பொய்க்குற்றச்சாட்டின் மூலம்  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். வழக்கு விசாரணையில் அரச தரப்புச் சட்டத்தரணி இத் தொழிலாளர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வாதாடியமை, பாசிச மோடி அரசின் தொழிலாளர் விரோதமான கொடிய முகத்தை வெளிக்காட்டி நின்றது.

எனவே, ஆயுள் தண்டனையும் ஏனைய தண்டனைகளும் விதிக்கப்பட்ட மாருதி – சுசுகி தொழிலாளர்களின் விடுதலைக்காக மேற்படித் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுடனும் அதற்கு ஆதரவாகப் போராட முன்வந்துள்ள இந்தியத் தொழிலாளர்களுடனும் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி போராட்டக் கரங்களைப் பிணைத்து நின்று தொழிலாள வர்க்க ஒருமைப்பாட்டை உயர்த்தி நிற்கிறது.


சி. கா. செந்திவேல்
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *