மேதினம் 2017 : NDMLP வடபிராந்தியக் கிளைகளின் அறிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்னைய ஜனாதிபதி ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராக மக்களிடம் வாக்குகள் பெற்று நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறி மைத்திரி – ரணில் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டபோது அனைத்துத் தரப்பு மக்களும் தாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என நம்பினர். ஆனால் இன்று மக்கள் ஏமாற்றப்பட்டுள்ள அதேவேளை இன்றைய ஆட்சியானது தனது கொடூர ஆட்சியதிகாரச் சுயரூபத்தை வெளிக்காட்டி வருகிறது.

கடந்த நாற்பது வருடகாலத் தரகு முதலாளிய பேரினவாத ஏகாதிபத்திய சார்பு ஆட்சிகளின் தொடர்ச்சியே இன்றைய ஆட்சி என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. தேசிய இனப்பிரச்சினை விடயத்திலும் அரசியற் தீர்வு ஒன்றினை வழங்குவதற்கான எந்தவொரு அக்கறைகொண்ட முயற்சியினையும் இவ்வரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

இன்றைய ஆட்சியாளர்கள் எவரும் புதியவர்கள் அல்லர். கடந்த 69 ஆண்டுகாலப் பாராளுமன்ற – நிறைவேற்று ஆட்சி அதிகாரத்தை ஆண்டு அனுபவித்து வந்த ஆளும் வர்க்க மேட்டுக்குடிச் சக்திகளே இவர்களாவர். இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த நவதாராளவாத உலகமயமாக்கற் பொருளாதாரத்தின் கீழான தாராளமயமும் தனியார்மயப்படுத்தலும் தொடரப்படுகின்றன.

தேசியப் பொருளாதாரம் முடக்கப்பட்டதன் மூலம் ஏற்றுமதியானது வீழ்ச்சி கண்டு நிற்கிறது. அதே வேளை தாராளமான இறக்குமதி மூலம் நுகர்வுப் பொருளாதாரமானது மேலோங்கிக் காணப்படுகிறது. இதன் மூலம் அந்நியப் பல்தேசியக் கம்பனிகளும் பெருவணிக நிறுவனங்களும் உள்நாட்டுத் தரகு முதலாளிய சக்திகளுமே பெருலாபமீட்டி வருகின்றன.

அதேவேளை, அரசாங்கம் 15 % வற்வரி உள்ளிட்ட மோசமான வரி விதிப்புகளால் 8,503.2 பில்லியன் ரூபாய்களைக்கொண்ட அந்நிய உள்நாட்டுக் கடன்களை மக்களின் தலைகளிற் சுமத்தி வருவதாலும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பும் வாழ்க்கைத்தர வீழ்ச்சியும் ஏற்பட்டு வருகின்றன. அரிசி, தேங்காய், சீனி, மரக்கறி, மீன் வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இவற்றால் பாதிக்கப்படுவோர் தொழிலாளர்களும் விவசாயிகளும்  உழைக்கும் மத்தியதரவர்க்க மக்களுமாகவே உள்ளனர். இத்தகைய மக்கள் வீதிக்கு வந்து தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளும் போராட்டங்களும் நியாயமானவையாகும்.

  • வடக்கு கிழக்கில் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதற்கான பதில்களை வேண்டியும், சிறைகளில் உள்ள அரசியற் கைதிகளை விடுவிக்கக் கோரியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வற்புறுத்தியும் வவுனியா, கிளிநொச்சி, மருதங்கேணி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மக்கள் பகல் இரவாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களையும் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்புப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
  • முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களும் மன்னார் முள்ளிக்குளம் மக்களும் தமது பூர்வீகக் காணிகளைத் தம்மிடம் ஒப்படைக்கக் கோரி இராணுவ முகாம், கடற்படை முகாம் ஆகியவற்றின் முன்பாகத் தொடர் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
  • கிளிநொச்சியில் பன்னங்கட்டிக் கிராமத்தில் பல வருடங்களாகத் தாம் குடியிருந்து வந்த, தனியாருக்குச் சொந்தமான 57 ஏக்கர் காணியினைப் பகிர்ந்து உரிமம் வழங்கும்படிக் கேட்டுக் காணியற்ற மக்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
  • அண்மைய ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின்மூலம் தமது பூர்வீகக் காணிகளை இழந்துநிற்கும் முசலிப் பிரதேச முஸ்லீம் மக்கள் மறிச்சுக்கட்டிப் பள்ளிவாசல் முன்பாகத் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
  • யாழ் மாவட்டத்தின் புத்தூர் – கலைமதி, ஈவினை – திடற்புலம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்துவரும் மயானங்களை அகற்றிச் சுகாதார நலனையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கக்கோரிப் போராடிவருகின்றனர்.
  • மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பட்டதாரிகள் பட்டம் பெற்று ஐந்து – ஆறு வருடங்கள் கடந்தும் வேலை பெறாத நிலையில் தமக்கு உரிய வேலைவாய்ப்பினை வழங்கக் கோரிப் பகல் இரவுப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
  • இதேபோன்ற வெகுஜனப் போராட்டங்களை மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் காணி, வீடு, சம்பள உயர்வு ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள்.
  • சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடும்படியும் இலவச மருத்துவக் கல்விக்கும் இலவச மருத்துவத்திற்கும் குழி பறிக்கும் தனியார் மயப்படுத்தலுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் மருத்துவர்களும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.
  • ஏற்கனவே ஸ்ரீலங்கா டெலிகொம் மனிதவலுத் தொழிலாளர்கள், தம்மை நிரந்தர ஊழியர்களாக உள்வாங்கக்கோரியும் காலகாலமாகப் போராடிப்பெற்ற தொழிலாளர் உரிமைகளை ஒழித்துக்கட்டும் மனிதவலுத் தொழில் முறையை இலங்கையில் இல்லாதொழிக்கக் கோரியும்  மூன்று மாதமாகத் தொடர்ச்சியாகப் பகல் இரவாக முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் எமது கட்சி, மக்கள் முன்னெடுத்து வரும் அனைத்துப் போராட்டங்களையும் ஆதரித்து அவர்களது கோரிக்கைகள் வெற்றி பெற ஒத்துழைப்புக்களையும் வழங்குகிறது. அதேவேளை, இன்றைய அரசாங்கம் மக்களது கோரிக்கைகளைக் கவனத்திற் கொள்ளாது ஜனநாயகத்தின் பெயரால் கள்ள மௌனம் காத்துவருவதை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் இத்தகைய மக்கள்விரோத ஆட்சியை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமானதாகும். எனவே, ரஷ்யாவின் மகத்தான ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுகூரப்படும் இவ் ஆண்டின் மே தினத்தில் மக்கள் எழுச்சி பெற்று அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து மக்கள் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காக அணிதிரள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *