புத்தூர் மயானப் பிரச்சினை பற்றிய கட்சியின் ஊடக அறிக்கை

30.05.2017                            

அண்மைய மாதங்களாகப் புத்தூர் கலைமதிக் கிராம மக்கள் தமது குடியிருப்புகள் மத்தியில் இருந்து வரும் மயானத்தை அகற்றக்கோரி பல்வேறு கவனயீர்ப்புப் போரட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அதன் காரணமாக மூன்று நாட்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் இடம்பெற்ற பொலிசார் – பொதுமக்களுக்கிடையிலான முறுகல் நிலைக்கும் பதற்றச் சூழலுக்கும் பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோக நடவடிக்கையே காரணமாகும். பக்க சார்பும் பழிவாங்கும் நோக்கமும் கொண்ட மேற்படிச் செயற்பாட்டினைத் திரித்தும் மறைத்தும் யாழ்ப்பாண ஊடகமான உதயன் பத்திரிகை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மீது பழி சுமத்திச் செய்தி வெளியிட்டதுடன் ஆசிரியத் தலையங்கமும் எழுதியமையானது விசனத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்.

மேற்படி கிராம மக்கள் முன்வைத்துள்ள மனிதாபிமானக் கோரிக்கையின் நியாயத்தை கண்டு கொள்ளாது, பிணப் புகையையும் ஏரிசாம்பல் தூசிகளையும் அம் மக்கள் அனுபவிக்க வேண்டும் என்ற பழைமைவாத ஆதிக்க சக்திகளுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் அப்பத்திரிகை எழுதியுள்ளதுடன் எமது கட்சி பின்னால் இருந்து தூண்டி விட்டுள்ளதாகவும் வக்கிரத்துடன் எழுதி இருப்பது நடுநிலைப் பத்திரிகை என்ற அதன் போலித்தனத்தையே எடுத்துக்காட்டுகிறது.

எமது கட்சி, தொழிலாளர்கள் விவசாயிகள் உழைக்கும் மக்களுக்கான கட்சி மட்டுமன்றி சமூக ஏற்றத்தாழ்வினால் ஒடுக்கப்பட்டுள்ள அனைத்து மக்களினதும் கட்சியாகும். அந்த வகையிலேயே நிலவுடைமையாலும் சொத்துடமையாலும் சாதி ஆதிக்கத்தாலும் ஒடுக்கப்பட்டு வந்த கலைமதிக் கிராம மக்கள் கடந்த மூன்று தசாப்பங்களாகத் தம்மைப் பிணைத்திருந்த அடிமைச் சங்கிலிகளை ஒன்றன் பின் ஒன்றாக உடைத்தெறிந்து கொண்டு தமக்குரிய உரிமைகளை நிலைநாட்டி வந்திருக்கிறார்கள்.

சமூக அநீதிகளுக்கு எதிரான அவர்களின் போராட்ட முன்னெடுப்புகளில் எந்த ஒரு தமிழர் தரப்பு ஆதிக்கவாத கட்சிகளும் உதவவோ பங்கெடுக்கவோ முன்வந்ததில்லை. அம் மக்களின் வாக்குகளைப் பெற்று சென்றார்களே தவிர அவர்களை மனிதர்களாகவோ அல்லது தமிழர்களாகவோ கண்டு கொள்ளவில்லை என்ற உண்மையைக் கூறியே ஆகவேண்டும்.

தமக்கான நிலம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமூகப்பண்பாடு அனைத்தையும் பழைமைவாத ஆதிக்கங்களோடு போராடியே அம் மக்கள் படிப்படியாகப் பெற்று வந்துள்ளனர். அதே வேளை சமூக விரோதச் செயல்களையோ அல்லது அடாவடித்தன ரவுடித்தனங்களையோ வாள்வெட்டுக் காலாச்சாரத்தையோ கொண்டிருக்காத சமூக அக்கறைகொண்ட இளந் தலைமுறையினரையும் மக்களையும் கொண்ட கட்டுப்பாடு உடைய கிராமமாகவே அது இருந்து வருகின்றது. இதற்கு எமது கட்சியின் வழிகாட்டலும் பங்களிப்பும் இருந்து வந்துள்ளது. அம் மக்களின் எழுச்சிக்கும் மாற்றங்களுக்கும் தியாக அர்ப்பணிப்புடன் செயலாற்றிவரும் முன்நிலைச் செயற்பாட்டாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தமது கிராமத்தின் மாற்றத்தில் மட்டுமன்றி வடபுலத்தில் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான பல்வேறு வகையான போராட்டங்களில் கலைமதிக் கிராம இளைஞர்களும் மக்களும் முற்போக்கு அரசியல் நிலைப்பாட்டுடனும் சமூக அக்கறையுடனும் பங்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடவேண்டியதாகும்.

இந் நிலையிலேயே சுமார் ஐயாயிரம் மக்கள் வாழ்ந்து வரும் அக்கிராமத்தின் மத்தியிலிருக்கும் மயானத்தை அகற்றி குடியிருப்புகளுக்கு அப்பால் இருந்து வரும் மயானங்களைப் பயன்படுத்துமாறு கலைமதிக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். சுகாதாரச் சீர்கேட்டிற்கும், சூழல் மாசடைதலுக்கும் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியோர் நோய்த்தாக்கங்களுக்கு ஆட்படுவதற்கும் பிணப்புகை, சாம்பல் தூசிகள் பரவுதற்கும் காரணமாக அமைந்துள்ள மேற்படி மயானம் அகற்றப்பட வேண்டும் என்பதே அம் மக்களின் உறுதியான நிலைப்பாடாகும்.

கூலி விவசாயிகளும் அன்றாடத் தொழிலாளர்களுமான கலைமதிக் கிராம மக்களின் மேற்படி கோரிக்கையில் மனிதாபிமானமும் நியாயத்தன்மையும் மக்கள் சார்பும் இருப்பதன் காரணமாகவே எமது கட்சி அதனை ஆதரித்து நிற்கின்றது. அதேபோன்று குடா நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் குடியிருப்புகள் மத்தில் இருந்து வரும் மயானங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதையும் எமது கட்சி வலியுறுத்திவருகின்றது.

பின்தங்கிய கிராமிய சமூகச் சூழலில் வாழ்ந்து வரும் உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருந்து வரும் பழைமை, வழமை, பாரம்பரியம் என்பவை சமூக நீதி அடிப்படையில் ஒதுக்கித் தள்ளவேண்டியவையாகும். அதன் மூலம் ஒட்டுமொத்தத் தமிழர் சமூகமும் முன்நோக்கிச் செல்ல முடியும்.

சமூக அக்கறையையும், மக்கள் ஒற்றுமையையும் வேண்டி நிற்கும் அனைத்து முற்போக்காளர்களும், சமூக அக்கறையாளர்களும், மக்கள் சார்புக் கட்சிகளும் அமைப்புகளும் தமது ஆதரவைக் கலைமதிக் கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் என எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வேண்டிக்கொள்கிறது.


சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர்

One thought on “புத்தூர் மயானப் பிரச்சினை பற்றிய கட்சியின் ஊடக அறிக்கை

  1. ஶ்ரீ மனோகரன் says:

    இந்த அறிக்கையை நான் வரவேற்கிறேன் . ஆண்ட பரம்பரையின் கருத்துகளை பிரதிபலிக்கும் ஊடகங்கள் இடதுசாரிகளைத் திட்டித்தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக உதயனின் செய்கையை பார்க்கிறேன். கட்சியின் அறிக்கைகளைக்கூட வெளியிடாத ஊடகங்கள் தாம்
    நடுநிலைவகிப்பதாக கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *