வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பிற்போக்குத்தனமானது.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மீது தமிழரசுக் கட்சித் தலைமையும் அதன் மாகாண சபை உறுப்பினர்களும் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் அக் கட்சியின் கடைந்தெடுத்த பிற்போக்குத் தனத்தையே எடுத்துக் காட்டுகிறது.

ஊழல் மோசடிகளிலும் அதிகார துஷ;பிரயோகங்களிலும் ஈடுபட்டு வந்த மாகாண அமைச்சர்கள் மீது விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் மேற்கொண்ட முடிவு நியாயமானதும் துணிவானதுமாகும். அதனை பொறுக்க மாட்டாத தமிழரசுக் கட்சித் தலைமை ஊழல் மோசடி புரிந்த அமைச்சர்களைப் பாதுகாக்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் விரோதமானதும் ஆதிக்க அரசியல் நிலைப்பாடு கொண்டதுமாகும். தமிழரசுத் தலைமையின் தான் தோன்றித்தனமான இச் செயலை எமது கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்கள் அரசியல் குழு சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் மீது மாகாண சபை உறுப்பினர்களால் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளை விசாரிக்க மூவர் கொண்ட விசாரணைக் குழுவை முதலமைச்சர் நியமித்திருந்தார். அக்குழுவினர் பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுத்து இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் கொடுத்தனர். அதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் நான்கு அமைச்சர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்தமை மிகைத் துணிவான செயற்பாடாக அமைந்திருந்தது.

முதலமைச்சரின் மேற்படி முடிவானது நாட்டில் இருந்து வரும் ஏனைய எட்டு மாகாணசபைகளுக்கும் ஒரு முன்மாதிரியாகும். ஆனால் ஊழல் மோசடி, அதிகார துஷ;பிரயோகம் செய்த அமைச்சர்களைப் பாதுகாக்கத் தமிழரசுக் கட்சியின் தலைமையும் அதன் மாகாணசபை உறுப்பினர்களும் களத்தில் இறங்கியிருப்பது அவர்களது சுயநல, பதவி வெறி, ஆதிக்க அரசியல் என்பவற்றின் அசிங்க முகங்களையே வெளிக்காட்டியுள்ளன.

அதேவேளை எஸ்.ஜே.வி செல்வநாயகம் முதல் மாவை சேனாதிராஜா வரை கூறி வந்த தமிழரைத் தமிழர் ஆட்சி செய்தால் பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று இன அடிப்படைத் தர்க்கத்தை இன்றைய செயற்பாடுகள் தகர்த்துள்ளன. பணம், பதவி, சுயநலம், சொத்துச் சேர்ப்பு என்பனவே தமிழர் மத்தியிலான ஆதிக்க அரசியலின் அடிப்படை என்பதையே தமிழரசுக் கட்சியின் இன்றைய நடவடிக்கைகள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. இன்றைய சூழலில் தமிழ் மக்களும் இளைஞர்களும் பரந்த முனைகளின் ஊடே முற்போக்கான வழிகளில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் எனப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

சி.கா.செந்திவேல்
பொதுச் செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *