சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி முழுமையாக அரசுடைமையாக்கப்பட வேண்டும்

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மூடப்பட்டு முழுமையாக அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்னும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களதும் பெற்றோரதும் வைத்தியர்களதும் கோரிக்கை முற்றிலும் நியாயமனாதாகும். ஆனால் நல்லாட்சி முகமூடி அணிந்துள்ள இன்றைய அரசாங்கம் முன்னைய மகிந்த ஆட்சி போன்று மாணவர்கள் மீது பொலிஸ் அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். மாணவரின் கோரிக்கைகளையும் அதற்கான போராட்டங்களையும் நசுக்கி பழிவாங்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எமது கட்சி எதிர்க்கின்றது. மாணவர்களும் பெற்றோரும் மருத்துவர்களும் முன்னெடுத்துவரும் எதிர்ப்புப் போராட்டங்களுக்குக் கட்சி தனது முழுமையான ஆதரவினையும் வழங்குகிறது. அதேவேளை, கைது செய்யப்பட்ட மாணவத் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.

இலங்கையில் இலவச மருத்துவம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதும் இலவசக் கல்வி மூலம் பல்கலைக்கழகங்கள் மருத்துவர்களை உருவாக்கி வருவதும் அதன் பலாபலன்களை நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அனுபவித்து வருவதும் ஒரு வரப்பிரசாதமாகும். ஆனால் இவற்றுக்குச் சமாதி கட்டவே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி எனும் பெரும் புதைகுழி தோண்டபட்டுள்ளது. மருத்துவத் துறைக்கான இப்புதைகுழி மூடப்படாதுவிட்டால் எதிர்காலத்தில் இலவச மருத்துவமும் அதற்கான இலவச மருத்துவக் கல்வியும் தனியார் துறையால் விழுங்கப்பட்டுவிடும். இதன் அபாயத்தை உணர்ந்தே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் போராடி வருகிறார்கள். அதற்கு இடதுசாரிக் கட்சிகளும் அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் முன்னணியில் இருந்துவரும் மாணவர்களை அடக்கியொடுக்குவதற்கும் பழிவாங்குவதற்கும் “நல்லாட்சி”அரசாங்கம் பொலிஸ் அடக்குமுறையினை ஏவி நிற்கின்றது.

அண்மையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்று சுகாதார அமைச்சை முற்றுகையிட்டுத் தமது கோரிக்கையை வலியுறுத்திய சந்தர்ப்பத்தைச் சாட்டாக வைத்து மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதலைப் பொலிசார் மேற்கொண்டனர். எண்பதுக்கும் மேற்பட்ட மணாவர்கள் காயங்களுக்கும் படுகாயங்களுக்கும் ஆளாகினர். மேலும், மாணவர்களைக் கைது செய்வதற்குத் தேடிவரும் பொலிசார் மாணவத் தலைவர்களான லகிரு வீரசேகர, சுகதானந்த தேரர், பைஷான் அஹமட் ஆகியோரைக் கைது செய்து விளக்கமறியலிலும் வைத்துள்ளனர்.

இத்தகைய பொலிஸ் அடக்குமுறைச் சம்பவம் முன்னைய மகிந்த ஆட்சிக்காலத்தின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. இது நல்லாட்சி எனும் முகமூடி அணிந்துகொண்டு முன்னைய ஆட்சிகள் முன்னெடுத்து வந்த தனியார்மயமாக்கக் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் போக்கையே எடுத்துக் கட்டுகிறது. எனவே> சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மூடப்படவேண்டும்> அதன் மூலம் இலவசக் கல்வியும் இலவச மருத்துவமும் பாதுகாக்கப்படவேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் முன்வைத்துவரும் கோரிக்கைகளை எமது கட்சி ஆதரித்து நிற்கின்றது.

சி. கா. செந்திவேல்

பொதுச் செயலாளர்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *