கண்டியில் தாக்கப்பட்டது முஸ்லிம்கள் மட்டுமல்ல! ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களும் உழைக்கும் மக்களும்தான்!

கண்டியில் தாக்கப்பட்டது முஸ்லிம்கள் மட்டுமல்ல!
ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களும் உழைக்கும் மக்களும்தான்!

10-03-2018

இனவெறுப்பும் மத வெறுப்பும் கொடிய வன்முறைகளும் காலத்துக்குக் காலம் எம் நாட்டின் பேரினவாத ஆளும்வர்க்க சக்திகளாலேயே மூட்டப்பட்டு எரியவிடப்படுகின்றன. தத்தமது ஆட்சி அதிகாரத்தைக் கைகளில் வைத்திருக்கவும் அதனை நீடித்து உறுதிப்படுத்தவும் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்கள் மீதான கொடிய இனமத வன்முறைகள் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகவே கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதியன்று அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகள், பள்ளிவாசல் மீது இனவெறித் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இம்மாதம் 4ம் திகதி கண்டியின் தெல்தெனியவில் ஆரம்பித்து திகண பிரதேசம் வரை நிகழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் எரியூட்டல்களும் கூட முன்னைய சம்பவங்களின் தொடர்ச்சியே. இதற்கு நல்லாட்சியின் பெயரிலான மைத்திரி, ரணில் தலைமையிலான பேரினவாத ஆட்சியாளர்களும் எதிர்த்தரப்பிலிருந்து பேரினவாதத்திற்கு எண்ணெய் ஊற்றிவரும் மகிந்த தலைமையிலானவர்களும் பொறுப்பாளிகளாவர்.

இத்தகைய நாசகார பேரினவாத சக்திகளை அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் அரசியல் ரீதியில் நிராகரிக்க வேண்டும். அவ்வாறு நிராகரிக்காவிட்டால், இன்று திகணவில் நடைபெறுவது நாளை மீளவும் வேறொரு பிரதேசத்தில் நிகழவே செய்யும். எனவே, முஸ்லீம் மக்கள் மீது இன்று நிகழ்த்தப்பட்டு வரும் திட்டமிட்ட தாக்குதல்களையும் எரியூட்டல்களையும் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளை, இவற்றுக்கு எதிராக அனைத்து உழைக்கும் மக்களும் நேர்மையான இடதுசாரிகளும் ஜனநாயக முற்போக்குச் சக்திகளும் தமது ஒன்றுபட்ட கரங்களையும், குரல்களையும் உயர்த்தி முன்செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.

கடந்த காலத்தில் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களுக்கெதிரான ஒவ்வொரு பேரினவாதத் தாக்குதல்களுக்குப் பின்னாலும் இரண்டு பிரதான ஆளும் வர்க்கக் கட்சிகளும், அவர்களோடு இணைந்தவர்களுமே இருந்து வந்துள்ளனர். நல்லாட்சி நல்லெண்ண முகமூடிகளை அணிந்து நிற்கும் கூட்டாட்சியும் அதே குட்டையில் ஊறிய மட்டையாகவே இருக்கிறது. இக் கூட்டாட்சி, தான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கையறு நிலையில் மக்களின் கவனத்தை திசைதிருப்ப வழமை போன்று பேரினவாதத்திற்குள் புகுந்து நிற்கின்றது. அத்துடன் மைத்திரி – ரணில் – மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான அதிகாரத்திற்கான போட்டியிலும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனவாதத் தீ பயன்படுத்தப்படுகிறது.

ஒருபுறத்தில் நாடும் மக்களும் நவகொலனிய, நவதாராளவாத உலகமயத்தால் விழுங்கப்படுகின்றனர். மறுபுறத்தில் அந்நிய சக்திகளுக்கு நாட்டைத் திறந்து வளங்களைத் தாரை வார்த்து தத்தமது ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்த ஆளும்வர்க்க சக்திகள் போட்டியிட்டு நிற்கிறார்கள். இந்த உண்மையை மறைக்கவும் அந்தந்த இன மக்களை அவர்கள் சார்ந்த அடையாளங்களுக்குள் வைத்திருக்கவும், ஆளும்வரக்கத்தினரும் அவர்களது எசமானர்களான அந்நிய சக்திகளும் முன்னின்று செயற்பட்டு வருகிறார்கள். அதன்மூலம் இவர்கள் தத்தமது உயர்வர்க்க மேட்டுக்குடி நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

இவற்றை உணர்ந்து அனைத்து இன, மத, மொழி, தேச வேறுபாடுகளுக்கு அப்பால் உழைக்கும் மக்கள் அனைவரும் வர்க்க ரீதியில் ஒன்றிணைந்து முன்செல்வது பற்றி அரசியல் அடிப்படையில் சிந்திப்பது அவசியமாகும். அதேவேளை, நாட்டின் நேர்மையான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் அணிதிரண்டு, ஏவப்படும் பேரினவாதத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி முன்செல்ல வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகிறது.

One thought on “கண்டியில் தாக்கப்பட்டது முஸ்லிம்கள் மட்டுமல்ல! ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களும் உழைக்கும் மக்களும்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *