சுகாதாரத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு

14.11.2016

யாழ் மாநகரசபையில் கடந்த ஆறு ஏழு வருடங்களாகச் சுகாதாரத் தொழிலாளர்களாகத் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவந்த 127 தொழிலாளர்களும், வேலைப்பகுதியிலும் ஏனைய பகுதிகளிலும் வேலைசெய்து வந்த மொத்தம் 197 பேரும் தங்களை நிரந்தரப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு வந்துள்ளனா. ஆனால் மாநகரசபை நிர்வாகம் மறுத்து வந்துள்ளது.

இந்நிலையில் தங்களை நிரந்தரமாக்கும்படி கோரிக்கையை முன்வைத்து கடந்த 07.11.2016 தொடக்கம் சுகாதாரத் தொழிலாளர்களும் ஏனைய தொழிலாளர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைப்பிற்கும் வாழ்வாதாரத்திற்கும் தொழில் நிரந்தரப்படுத்தும் கோரிக்கை அடிப்படையானதாகும். எனவே அத் தொழிலாளர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானதாகும். ஆனால் இவர்கள் வெறும் சுகாதாரத் தொழிலாளர்கள்தானே, இவர்கள் என்ன கோரிக்கை வைப்பது என்னும் ஆதிக்கச் சிந்தனைத் தோரணையில் யாழ் மாநகரசபை நிர்வாகமும், மாகாணசபை உயர் நிர்வாகமும் நடந்துகொள்வதைப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகிறது.

தொழிலாளர்கள் தமது பணிகளில் தம்மை நிரந்தரமாக்கக் கோருவது சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கல்ல. தமது வாழ்க்கையை கொண்டு நடாத்தவும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் ஓய்வூதியத்துக்கும் ஏனைய சட்டபூர்வமான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கேயாகும். அத்தகைய ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வுக்கும் தொழிலிற்கும் உலை வைக்கும் வகையில் நிரந்தரமாக்குவதைத் தட்டிக்கழித்து வருவது எவ்வகையிலும் நியாயமாகாது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அச்சுறுத்துவதும் மாற்று வழிமுறையை நாடப்போவதாகக் கூறுவதும் அநீதியானதாகும். இத்தொழிலாளர்களை அடிநிலைத் தொழிலாளர்கள் என்ற ரீதியிலும் சமூக ஏற்றத்தாழ்வு மனப்பான்மையிலும் மாநகரசபை உயர் நிர்வாகிகளும் மாகாணசபையின் சில அமைச்சர்களும் நடந்து கொள்வது அநாகரிகமானதாகும்.

யாழ் மாநகர சபையில் 1970ம் ஆண்டுகளில் 500 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அன்றைய முதல்வர்களான அல்பிரட்துரையப்பா, அ.விஸ்வநாதன், விசேடஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் பல கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அன்று தமக்கு மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்த உரிமைகளை மாநகர சபைத் தொழிலாளர்கள் வென்றெடுத்த வரலாறு உண்டு அந்தவகையில் தற்போதைய சுகாதாரத் தொழிலாளர்களின் நிரந்தரமாக்கும் கோரிக்கையை வென்றெடுக்கத் தொடர்ந்தும் போராடவேண்டும் என்பதையே எமது கட்சி வலியுறுத்தி அதற்கான ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.


சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *