வரவுசெலவுத் திட்டம் 2017

16-11-2016

மைத்திரி-ரணில் தலைமையிலான நல்லாட்சி எனப்படும் இன்றைய அரசாங்கம் முன்வைத்துள்ள 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அவர்களின் சுயரூபத்தையும் தவறான திசைமார்க்கத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது. விவசாயம், சிறுகைத்தொழில், மீன்பிடி, மற்றும் உள்நாட்டு உற்பத்திப் பொருளாதாரம் ஆகியன நிராகரிக்கப்பட்டு, அந்நிய இறக்குமதிப் பொருளாதாரத்திற்கான வழிவகைகள் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது முழு நாட்டையும் எமது பொருளாதாரத்தையும் நவகொலனிய நவதாராள உலகமயமாதலுடன் இறுகப் பிணைத்துக் கொள்ள வழிகாட்டுகிறது.

தாராள வர்த்தகத்தையும், தனியார்மயத்தையும், நிதிமூலதன வரவழைப்பையும் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கையாக கொண்டே இவ்வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களினதும் கீழ் நடுத்தர வர்க்கத்தினரதும் கழுத்துக்கள் நெரிக்கப்பட்டு வயிறுகள் காயவிடப்படப் போகின்றன.

அதேவேளை நாட்டின் சனத்தொகையில் 10 வீதமானவர்களான மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் அவர்களோடு இணைந்த தரகு முதலாளிகள், அந்நிய முதலீட்டாளர்கள், பெருவணிக நிறுவன முதலாளிகள், அவர்களைப் பாதுகாத்து நிற்கும் ஆளும் வர்க்க அரசியல் சக்திகள் என்போருக்கு வரிச்சலுகைகளும், வரப்பிரசாதங்களும் தாராளமாக கிடைப்பதற்குரிய வழிவகைகளை இவ் வரவு செலவுத் திட்டம் வழங்கி நிற்கிறது.

எனவே இப்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் வரவு செலவுத் திட்டமானது அப்பட்டமான மக்கள் விரோத வரவு செலவுத் திட்டம் என்பதில் ஐயமில்லை. இதனை எமது கட்சி வன்மையாக கண்டித்து எதிர்த்து நிற்கின்றது.

மேலும், இவ் வரவு செலவுத் திட்டமானது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்நிய முதலீட்டாளர்களுக்கும் நிதி மூலதனக்காரர்களுக்கும் அழைப்பு விடுக்கும் நோக்கத்தை உள்ளடக்கி நிற்கின்றது.

வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மறைமுக வரிகள் மூலம் குறிப்பாக 15 வீத வற்வரி எனப்படும் பெறுமதி சேர் வரி விதிப்பினால் அனைத்து உழைக்கும் மக்களும் கடுமையான வாழ்க்கை நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். விவசாயம், சிறுகைத்தொழில்கள், மீன்பிடி போன்றவற்றிற்கு அற்ப நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை கல்வி, சுகாதாரத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் வெட்டிக்குறைக்கப்பட்டுள்ளன. இத்துறைகளில் தனியார் மயத்திற்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கைத்தொலைபேசிகளுக்கான வரிகள், நீர்க்கட்டண உயர்வு, போக்குவரத்துத் தண்டப்பணம், போன்றவற்றுள் கொள்ளை இலாப அறவீடுகளை நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

எனவே, இவ் வரவு செலவுத் திட்டம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உழைக்கும் மக்களையும் கீழ் நடுத்தர வர்க்க மக்களையும் கருவறுக்கும் ஒரு வரவு செலவுத்திட்டமாகவே காணமுடிகிறது. இது நல்லாட்சி அரசாங்கம் அல்ல. மக்கள் விரோத அரசாங்கம் தான் என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது. இதனை மக்கள் கண்டித்து எதிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை எமது கட்சி விடுக்கின்றது.

மத்திய குழு சார்பாக..
சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *