ஃபிடல் காஸ்ரோவுக்குப் புரட்சிகர வணக்கங்கள்

26-11-2016

கியூபப் புரட்சியின் தலைமைத் தளபதியான தோழர் ஃபிடல் காஸ்ரோ 25 நவம்பர் 2016 அன்று எம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டதையிட்டு மிகுந்த வருத்தமடைகிறோம்.

உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தோழர் காஸ்ட்ரோவினால் ஆற்றப்பட்ட சேவைகளுக்கான எம் ஆழ்ந்த உயர்மதிப்பினை அன்புடன் கொண்டுசேர்க்கவும்.

கியூபாவினுடைய விடுதலையிலும் புரட்சிகர மாற்றத்திலும் அவரது தலைமைப் பாத்திரமானது ஏறத்தாழ 58 ஆண்டுகளாக உலகின் அனைத்து ஒடுக்கப்படும் மக்களதும் தேசங்களதும் உந்துசக்தியாக இருந்துள்ளது. இனிவரும் காலங்களுக்கும் அது அவ்வாறே இருக்கும்.

கியூபப் புரட்சியையும் சோசலிசத்தையும் தளராது வீரத்துடன் அவர் காத்து நின்றமையும் ஏனைய பல நாடுகளுக்கு – குறிப்பாக இலத்தின் அமெரிக்காவுக்கும் ஆபிரிக்காவுக்கும் – அவர் கொடுத்த ஆதரவும் முன்மாதிரியானது. குறிப்பாக, கியூபாவினதும் சோசலிசத்தினதும் மிகக் கடினமான ஆண்டுகளில் ஏகாதிபத்தியத்தின் மிக மோசமான சதிகளுக்கும் எதிர்ப்புக்கும் முகம்கொடுத்தவாறு அவர் கொள்கையிற் கொண்ட உறுதி, சமூக நீதிக்காகப் போராடும் மக்களுக்குப் பெரும் பலமாக அமைந்தது.

அவரது வழிகாட்டுதலின் கீழ், மக்களுக்குச் சேவை செய்வதில் – குறிப்பாக அத்தியாவசியச் சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதில் –  கியூபாவினால் உருவாக்கப்பட்ட எடுத்துக்காட்டுகள், அவர் தலைமைப் பதவியிலிருந்து விலகியபின்னரும் செயலார்வத்தைக் கைவிடாது தொடர்ந்தது போன்ற  எடுத்துக்காட்டுகள் எல்லாத் தேசங்களாலும் முன்மாதிரியாகக் கொள்ளப்படவேண்டியவை.

ஃபிடல் காஸ்ரோவுக்கான எமது உயர்மதிப்பை  வெளிப்படுத்துவதற்கு எவ்வளவு சொற்களும் போதுமானதல்ல.

எவரது இழப்பு கியூபாவுக்கு மட்டுமன்றி முழு மனித குலத்துக்குமே பேரிழப்பாக அமையுமோ, அத்தகு பெரும் புரட்சியாளரும் மனித நேயத்தின் தலைவருமான ஃபிடல் காஸ்ரோவுக்கு எமது தோழமையுடனான வணக்கத்தினைத் தெரிவித்து நிற்கிறோம்.


தோழமையுடன்,
சி. கா. செந்திவேல்
பொதுச்செயலாளர்
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *