யாழ் மருத்துவபீட மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு

17-01-2017

இலங்கையின் இலவச மருத்துவக் கல்வியையும், மக்களுக்கான இலவச மருத்துவத்தையும் பாதுகாக்கக் கோரியும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதை தடைசெய்ய வற்புறுத்தியும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் முன்னெடுத்துவரும் ஒரு வாரகால வகுப்புப் பகிஸ்கரிப்பும் கவனயீர்ப்புப் போராட்டமும் முற்றிலும் நியாயமானதாகும்.

ஏகப் பெரும்பான்மையான சாதாரண மக்களின் இலவச மருத்துவக் கல்விக்கான உரிமையையும் இலவச சுகாதாரத்தையும் பாதுகாக்கும் நோக்குடனான யாழ்-பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் போராட்டத்தை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வரவேற்று ஆதரவு தெரிவிப்பதுடன் சமூக அக்கறையுள்ள அனைவரும் அவர்களது கோரிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

கடந்த அரசாங்கத்தின் போது 2008ம் ஆண்டில் சைட்டம் (SAITM) எனப்படும் தெற்காசிய தொழில் நுட்ப மற்றும் முகாமைத்துவக் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. முற்றிலும் தனியார் முதலீட்டிலான இந்நிறுவனத்தில் 2011ம் ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பிற்கான அலகு உருவாக்கப்பட்டு பெருந்தொகைப்பணம் செலுத்தும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இது தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாட்டிற்குள் கொண்டுவந்து சேர்க்கும் முதல் முயற்சியாக அமைந்தது.

இதனை ஆரம்பத்தில் இருந்தே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் சமூக அக்கறையாளர்களும்  முற்போக்கு சக்திகளும் எதிர்த்து வந்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை அன்றைய அரசாங்கத்தின் கீழும் இன்றைய நல்லாட்சியின் பெயரிலான அரசாங்கத்தின் கீழும் முன்னெடுத்து வந்துள்ளனர்.

இந் நிலையில் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் மறுத்து வருகின்றது. ஆனால் இம் மருத்துவக் கல்லூரிக்கு அரசாங்கம் அனுமதி அளித்தால் மேலும் பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெரும் முதலீட்டில் தோற்றம் பெறும் வாய்ப்பே அதிகரிக்கும். அதன் மூலம் நாட்டில் தொடர்ந்து இருந்து வரும் இலவச மருத்துவக் கல்வியும், மக்களுக்கான இலவச மருத்துவத்துறையும் தனியார் முதலீட்டுத் துறையினரால் விழுங்கப்பட்டு நாசமாக்கப்படும் அபாயம் இன்றிருப்பதையும் விட அதிகரித்து செல்லவே செய்யும்.  இதனால் பாதிக்கப்படப் போவது சாதாரண மக்களாகவே இருப்பர்.

எனவே, ஏற்கனவே அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்கள் முன்னெடுத்து வரும்  போராட்டங்களோடு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களும் இணைந்து நின்று தமது பகிஸ்கரிப்பு – கவனயீர்ப்புப் போராட்டத்தைச் சமூக அக்கறையோடும் மக்களின் இலவச மருத்துவ நலன் நோக்கிலும் முன்னெடுத்து வருவது முற்றிலும் நியாயமானதும் வரவேற்கத்தக்கதுமாகும். ஆதலால் அனைத்து மக்களும் இப்போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பக்கபலமாக நிற்பது அவசியமாகும்.


சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர்.  
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *