காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்துக்கு ஆதரவு

25.01.2017

  • இறுதிப் போரின் போதும் அதற்கு முன்பும்  கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், காணாமற் போகச் செய்யப்பட்டோருக்குத் தெளிவான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும்.
  • நீண்ட காலமாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
  • பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனே இரத்துச் செய்யப்பட வேண்டும்.

மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து காணாமற் போகச் செய்யப்பட்டோரின்  பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள், உறவினர்கள் தமக்கு நியாயமான பதில் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை வவுனியாவில் முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கு ஜனநாயக, மனித உரிமை விரும்பிகளும் அரசியல் சமூகப் பிரதிநிதிகளும் மக்களும் ஆதரவு வழங்கி வருகிறார்கள். நல்லாட்சியின் பெயரிலான இன்றைய அரசாங்கத்திடம் நீதி நியாயம் கேட்டு நிற்கும் மேற்படிப் போராட்டத்தைப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆதரித்து ஒத்துழைப்பையும் வழங்குகிறது.

கொடிய போர் முடிவுற்று ஏழரை ஆண்டுகள் கழிந்தும், காணாமற் போகச் செய்யப்பட்டோர் பற்றிய பதில் வழங்கப்படவில்லை. வடக்கு கிழக்கு மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கிப் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இரண்டு வருட கால ஆட்சியில் தமது உறவுகளை இழந்து தவித்து நிற்கும் மக்களுக்கு எவ்வித பதிலும் வழங்காது மௌனம் சாதித்து வருகிறது. வெறும் கண்துடைப்புச் செயலாகக் காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கான அலுவலகம் திறக்கப்பட்டதே தவிர நம்பிக்கை தரும் எவ்விதச் செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை.

இந் நிலையில் தமது உறவுகள் எங்கிருக்கிறார்கள், உயிருடன் உள்ளனரா, எப்போது திரும்பி வருவார்கள் என்ற ஏக்கப் பெருமூச்சுடனும் கண்ணீர் கம்பலையுடனும் வாழ்ந்து வருவோரில் ஒரு பகுதியினரே கடந்த திங்கள் முதல் வவுனியா நகரில் சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்றாவது நாளினை கடந்துள்ள இப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதரவாகவும், பக்கபலமாகவும் நிற்பது அவசியமாகும். தமிழகத்தின் சல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக தமிழக மக்களும், இளைஞர்களும் முன்னெடுத்த போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு கொழும்பு பிரதேசங்களில் வீதியில் இறங்கிப் போராட்டக் குரல் எழுப்பிய தமிழ் இளைஞர்களும் மக்களும் காணாமற் போகச் செய்யப்பட்டோருக்குப் பதில் வேண்டியும், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டோரின் விடுதலை வேண்டியும் வவுனியாவில் இடம்பெற்றுவரும் சாகும்வரையான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்குத் தமது ஆதரவைத் தெரிவித்து வலுச்சேர்க்க முன்வர வேண்டும் என எமது கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.


சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *