கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு

05-02-2017

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு, பிலக் குடியிருப்புக் காணிகளை அவற்றின் சொந்தக்காரர்களான 84 குடும்பங்களைச் சேர்ந்த  மக்களிடம் கையளிப்பதே நியாயமாகும்.

போரினால், அதுவும் இறுதிப் போர்க்காலத்தில் பாரிய உயிர் உடைமை  இழப்புகளையும்  துயரங்களையும் அனுபவித்த  அம் மக்களின் காணிகளைப் போர் முடிவுற்று ஏழரை ஆண்டுகள் கடந்த பின்பும் படையினரும் அரசாங்கமும் கையளளிக்க மறுத்து வருவது கொடுமையானதாகும். இதனை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எனவே தமது காணிகளைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கேப்பாப்புலவு பிலக் குடியிருப்பு மக்கள் அங்குள்ள விமானப்படை முகாமிற்கு முன்னால் இரவு பகலாகத் தொடர்ச்சியான போராட்டத்தை நடாத்தி வருகிறார்கள்.

அவர்களது நியாயமான போராட்டத்தை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆதரித்து ஒத்துழைப்பையும் வழங்குகின்றது. அம் மக்களது நியாயமான கோரிக்கையினை உடன் நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

இன்றைய ஜனாதிபதி பதவிக்கு வருவதற்காக வாக்களித்த தமிழ் மக்கள், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கும் என்றே நம்பியிருந்தனர். அதேபோன்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்ற ஆசனங்களுக்குச் சென்று நல்லாட்சியின்  பெயரிலான அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடாத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எதனையும் பெற்றுக் கொடுக்க முடிய வில்லை.

எனவே பாதிக்கப்பட்ட மக்கள் தாமே தமக்குரிய வழிகளில் போராட முன் வந்துள்ளார்கள்.  அவர்களது கோரிக்கைகளும் முன்னெடுக்கும் போராட்டங்களும் நியாயமானவையாகும். அவற்றுக்கு நாம் அனைவரும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி அவர்கள் தமது காணிகளைப் பெற்றுக் கொள்ளப் பக்கபலமாக நிற்க வேண்டும்.


சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *